பஸ்-வேன் பயங்கர மோதல்; 28 பயணிகள் காயம்
நெல்லை அருகே தனியார் பஸ்சும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 28 பயணிகள் காயம் அடைந்தனர்.
நெல்லை அருகே தனியார் பஸ்சும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 28 பயணிகள் காயம் அடைந்தனர்.
சாமி தரிசனத்துக்கு...
ராமநாதபுரம் மாவட்டம் சர்க்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவர் அதே பகுதியை சேர்ந்தவர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று காலை வேனில் வந்தார். வேனை ராமநாதபுரம் வண்டிக்கரை பகுதியை சேர்ந்த பழனிசெல்வம் (42) என்பவர் ஓட்டினார்.
அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வனதிருப்பதிக்கு சென்று விட்டு நெல்லை வழியாக விருதுநகருக்கு புறப்பட்டனர்.
பஸ்-வேன் மோதல்
நெல்லை அருகே திருச்செந்தூர் ரோட்டில் ஆச்சிமடம் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் முக்காணிக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை பாவூர்சத்திரத்தை சேர்ந்த நடராஜன் மகன் ராம் பிர்லா (32) ஓட்டினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பகுதி வலதுபக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, எதிரே வந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ் மற்றும் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
28 பேர் காயம்
இந்த விபத்தில் வேனில் இருந்த செந்தில்குமார், முருகேசன் (60), நந்தினி (39), சுமதி (62), தினேஷ்குமார் (29), பஞ்சவர்ணம் (54), டிரைவர் பழனிசெல்வம் ஆகியோரும், பஸ்சில் இருந்த டிரைவர் ராம்பிர்லா, கண்டக்டர், பயணிகள் என மொத்தம் 21 பேரும் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வேன் டிரைவர் பழனிசெல்வத்திற்கு மட்டும் படுகாயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக ஆச்சிமடம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.