எருமப்பட்டி ஊருக்குள் வராத பஸ்கள்
எருமப்பட்டி:-
எருமப்பட்டி ஊருக்குள் வராமல் சென்ற பஸ்களால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதால் பிளஸ்-2 மாணவ- மாணவிகள் அவதிப்பட்டனர்.
பிளஸ்-2 தேர்வு
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியதால் இந்த பள்ளிகளின் மாணவ- மாணவிகள் மட்டும் அல்லாமல் பொட்டிரெட்டிப்பட்டி, வரகூர், காவக்காரப்பட்டி ஆகிய அரசு பள்ளி மாணவ- மாணவிகளும் எருமப்பட்டி அரசு பள்ளிகளுக்கு வந்துதான் தேர்வு எழுதுகின்றனர்.
இதற்கிடையே எருமப்பட்டியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் பொன்னேரி கைகாட்டி என்ற இடத்தில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன் அருகில் சர்வீஸ் ரோடும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் பஸ்கள் பொன்னேரி கைகாட்டியில் நின்று பயணிகளை இறக்கி விட்டு சென்றன.
மாணவ- மாணவிகள் அவதி
இதனால் எருமப்பட்டிக்கு பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவ- மாணவிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து தேர்வு எழுதினர். இதனால் மாணவ- மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். சில மாணவர்கள் தாமதமாக தேர்வு எழுத வந்தனர். இதுதவிர எருமப்பட்டிக்கு வரும் வெளியூர் பயணிகளும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் வந்தனர்.
பாலம் அமைக்கும் பணியின் போது சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டும் எந்த பஸ்களும் எருமப்பட்டி ஊருக்கு வந்துசெல்லாதது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், உடனே பஸ்கள் அனைத்தும் எருமப்பட்டி ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.