ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தில் தரையில் அமரும் பயணிகள்


ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தில் தரையில் அமரும் பயணிகள்
x

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. ஆனால் போதிய இருக்கை வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் தரையில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. ஆனால் போதிய இருக்கை வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் தரையில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தொடரும் சோகம்

திருப்பூரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பஸ் நிைலயமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டது. ஆனால் இந்த பணியானது வருடக்கணக்கில் நடந்து வந்ததால் பழைய பஸ் நிலையம் அருகே தற்காலிக பஸ் நிலையம் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் பஸ்களை நிறுத்துவதற்கு போதுமான இடமின்றி தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வந்தனர். இதேபோல், பொதுமக்கள் நடுரோட்டில் நின்று பாதுகாப்பற்ற வகையில் பஸ் ஏறி வந்தனர். இதோடு குடிநீர் வசதி, இருக்கை வசதி, கழிப்பிட வசதி போன்றவை இன்றியும் பயணிகள் நீண்ட காலமாக பல்வேறு சிரமத்தை சந்தித்து வந்தனர். இப்படிப்பட்ட நிலையில் கடந்த மாதம் இந்த பஸ் நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், தற்போது இந்த புதிய பஸ் நிலையத்தில் போதுமான வசதியின்றி பயணிகளின் சோகம் தொடர்ந்து வருகிறது.

தரையில் அமரும் பயணிகள்

பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் சோமனூர், மங்கலம், பல்லடம், ஊத்துக்குளி காங்கேயம் உள்ளிட்ட பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் பயணிகள் அமர்வதற்கான இருக்கை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இந்த பகுதியில் ஒரு இருக்கை கூட இல்லாத காரணத்தால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தரையில் அமர்ந்திருக்கின்றனர். இதில் கைக்குழந்தையோடு வருபவர்கள் தரையில் அமர்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல், சில வயதானவர்களால் தரையில் அமர முடியாத அளவிற்கு உடல் ரீதியிலான பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் இதனால் அவர்கள் தரையில் அமர முடியாமலும், கால்கடுக்க நிற்க முடியாமலும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல், பஸ் நிலையத்தில் அனைத்து வழித்தடத்திலும் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கைக்கு தகுந்த அளவு ரேக்குகள் இல்லாத காரணத்தால் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் தங்களுக்கான பஸ்சை தேடி அலைய வேண்டியுள்ளது.

பார்க்க பிரமாண்டம்...

மேலும் ஒவ்வொரு பஸ்சையும் மறைத்தபடி பிற பஸ்கள் நிறுத்தப்படுவதால் தங்களுக்கான பஸ் வருவதும், செல்வதும் தெரியாமல் பயணிகள் பஸ்சை தவற விடுகின்றனர். இது குறித்து திருப்பூரை சேர்ந்த மல்லிகா என்பவர் கூறியதாவது, இங்கு அமருவதற்கு இருக்கை இல்லாமல் கால் வலிக்க காத்து நிற்க வேண்டியுள்ளது. இதேபோல், மினி பஸ்கள் அங்குமிங்குமாக நிறுத்தப்படுவதால் பஸ் நிலையத்தில் எப்போதும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னிடம் இருந்த கைப்பையை பறித்து சென்று விட்டனர். இதில் எனது செல்போன், பணம், பல்வேறு அடையாள அட்டைகள் காணாமல் போய் விட்டன. பஸ் நிலையம் பார்ப்பதற்கு தான் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் பயணிகளின் திண்டாட்டம் எப்போதும் போல தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

காசு கொடுத்தால் கழிப்பிடம்

இதேபோல், திருப்பூரை சேர்ந்த ராமசாமி என்பவர் கூறியதாவது, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய இவ்வளவு பெரிய பஸ் நிலையத்தில் போதுமான இருக்கை வசதி செய்யப்படாமல் இருப்பது அவமானகரமான விஷயமாகும். இங்கு பஸ் நிலையம் திறக்கப்பட்ட போது அனைத்து கழிப்பிடங்களிலும் பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இப்போது ஒவ்வொரு கழிவறை முன்பும் மேசை போட்டு கட்டணம் வசூலிக்கின்றனர். பஸ் நிலையத்தில் ஒரு இலவச கழிப்பிடம் கூட இல்லை. இதனால் கையில காசு, வாயில தோலை என்பது போல காசு இருந்தால் தான் கழிப்பிடம் என்ற நிலை உள்ளது. இதனால் அடிக்கடி பஸ்நிலையம் வந்து செல்லும் ஏழை மக்களுக்கு இது சிரமத்தை அளிக்கும். இதேபோல், பஸ் நிலையத்தில் தொலை தூர பஸ்களுக்கான கால அட்டவணை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் டவுண் பஸ்களுக்கு வைக்கப்படவில்லை. இந்த பஸ்களுக்கும் அட்டவணை வைக்கப்பட்டால் ஏராளமானவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அம்மா உணவகம் வேண்டும்

தற்போது பஸ் நிலையத்தின் உள்ளே கோவை மற்றும் தொலை தூர பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையானது மிகவும் உயரத்தில் இருப்பதால் பாதி வெயில் அப்படியே கீழே பயணிகள் அமரும் இடத்தில் விழுகிறது. மழை நேரத்தில் மழை சாரலும் படும் வாய்ப்பு உள்ளது. இதனால் மேற்கூரை இருந்தும் பயனில்லை. இதேபோல் கடந்த காலத்தில் இந்த பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் ஏராளமான பயணிகள் பயன்பெற்று வந்ததாகவும், இதனால் தற்போது இந்த பஸ் நிலையத்தில் மீண்டும் அம்மா உணவகம் கொண்டு வர வேண்டும் என்பதும் பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது. இதேபோல், பஸ் நிலையத்தில் மினி பஸ்கள் நிறுத்துவதற்கென தனி இடம் ஒதுக்குவதன் மூலம் பஸ் நிலையத்தில் நெருக்கடி குறையும் என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். பஸ் நிலையத்தை புதுமையாகவும், வசதியாகவும் மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டுவது தெரிகிறது. ஆனால், சிறு, சிறு குறைகளாக உள்ள ஓட்டைகளை அடைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.


Related Tags :
Next Story