'தினத்தந்தி' செய்தியால் பஸ் நிலையத்தில் புதிய இருக்கைகள், மினி பஸ்களுக்கு மாற்று ஏற்பாடுகள்
‘தினத்தந்தி’ செய்தியால் பஸ் நிலையத்தில் புதிய இருக்கைகள், மினி பஸ்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர்,டிச.8-
'தினத்தந்தி' செய்தியால் பஸ் நிலையத்தில் புதிய இருக்கைகள், மினி பஸ்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பஸ் நிலையமானது இடிக்கப்பட்டு'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு கடந்த மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் இங்கு மங்கலம், பல்லடம், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் செல்லக்கூடிய இடத்தில் பயணிகள் அமருவதற்கான இருக்கை வசதி முற்றிலும் செய்யப்படாமல் இருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வரும் நிலையில் இருக்கை வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் தரையில் அமர வேண்டிய அவலம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதேபோல், இங்கு பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் பயணிகள் நிற்பதற்கும், பஸ்சில் ஏறுவதற்கும் சிரமப்பட்டு வந்தனர். இவ்வாறு பயணிகள் அனுபவித்து வரும் அனைத்து சிரமங்கள் குறித்தும் கடந்த சில தினங்களுக்கு முன்பு 'தினத்தந்தி' நாளிதழில் 'ஸ்மார்ட் சிட்டி' பஸ் நிலையத்தில் தரையில் அமரும் பயணிகள்' என்ற தலைப்பில் பல்வேறு படங்களுடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதில் மினி பஸ்களை இயக்குவதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது 'தினத்தந்தி'் செய்தி எதிரொலியாக மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. டவுண் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் பயணிகள் அமருவதற்கு வரிசையாக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதேபோன்று பஸ் நிலையத்தில் நெரிசலை தவிர்க்கும் வகையில் மினி பஸ்கள் நிறுத்துவதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் உள்ளே நிறுத்தப்பட்ட மினி பஸ்கள் அனைத்தும் தற்போது பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பஸ் நிலையத்தில் இருக்கை வசதி செய்யப்பட்டிருப்பதும், மினி பஸ்கள் மாற்றி நிறுத்தப்பட்டுள்ளதும் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை மக்கள் பாராட்டும் அதே வேளையில், இருக்கைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கின்றனர்.