நாய் மீது மோதியதால்மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி
பெரியகுளம் அருகே நாய் மீது மோதியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலியானார். நாயும் பரிதாபமாக இறந்தது.
கும்பக்கரை அருவி
பெரியகுளம் அருகே உள்ள கரட்டூரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 32). தனியார் மதுபான பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கொடைக்கானலை சேர்ந்தவர் சிவபாண்டி (23). இவர்கள் இருவரும் உறவினர்கள். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் கும்பக்கரை அருவிக்கு செல்ல முடிவு செய்தனர். பின்னர் கும்பக்கரை அருவிக்கு சென்று 2 பேரும் ஆனந்தமாய் குளித்தனர்.
இதையடுத்து 2 பேரும் அருவியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கரட்டூருக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பார்த்திபன் ஓட்டினார். பின்னால் சிவபாண்டி அமர்ந்திருந்தார். கும்பக்கரை-பெரியகுளம் சாலையில் காவல் குடிசை அருகே மோட்டார் சைக்கிள் சென்றது.
வாலிபர் பலி
அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்தது. இதனால் நாய் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பார்த்திபன், சிவபாண்டி ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். நாய் சம்பவ இடத்திலேயே இறந்தது.பின்னர் படுகாயம் அடைந்த பார்த்திபன், சிவபாண்டி ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பார்த்திபன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பார்த்திபனுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.