சாயல்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கப்படும்-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
சாயல்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
முதுகுளத்தூர்,
சாயல்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
விலையில்லா சைக்கிள்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பாண்டி, மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி விஜயகுமார், முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, பள்ளி தாளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் முன்னாள் தாளாளரும் பேரூராட்சி தலைவருமான ஷாஜகான் அனைவரையும் வரவேற்றார். இதில் 105 மாணவர், 142 மாணவிகள் என 247 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
புறவழிச்சாலை
முதுகுளத்தூர் தொகுதியை முன்னேறிய தொகுதியாக மாற்றியமைக்க பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் 99 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கின்ற 9,936 மாணவ - மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்க திட்டமிட்டு, இதுவரை 5091 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டு விட்டது, விரைவில் முழுமையாக வழங்கப்படும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தனிக் கவனம் செலுத்தி மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், சாலை, பஸ் போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என அடிப்படை வசதிகளும் முழு வீச்சில் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது, சாயல்குடியில் போக்கு வரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கிழக்கு கடற்கரையில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நேர்முக உதவியாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் சண்முகம், ஜெயபால், பூபதி மணி, ஆறுமுகவேல், குலாம் முகைதீன், கோவிந்தராஜ், முன்னாள் ஜமாத் தலைவர் முகமது இக்பால், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வடமலையான், புனவாசல் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் பழக்கடை ஆதி, முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவியாளர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், உதவி தலைமை ஆசிரியர்கள் குரைசி, ஜாகிர் உசேன், உடற்கல்வி ஆசிரியர்கள் கமல் பாட்சா, முகமது உசேன், அன்சாரி முன்னாள் விவசாய அணி செல்லமணி, தி.மு.க. நிர்வாகி தூவல் மூர்த்தி, பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியர் அலாவுதீன் நன்றி கூறினார்.