தர்மபுரி நகராட்சி கவுன்சிலர்களுக்கான பயிற்சி முகாம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் குறித்து தர்மபுரி நகராட்சி கவுன்சிலர்களுக்கான பயிற்சி முகாம் தர்மபுரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார். முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் கடமைகள், நகராட்சி பிரதிநிதிகளின் பொறுப்புகள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மான்விழி பயிற்சி நோக்கம் குறித்து பேசினார். மாவட்ட பயிற்சியாளர் பன்னீர்செல்வம், மகளிர் திட்ட பயிற்சியாளர்கள் தெரசாள், கலைச்செல்வி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009- ன் படி அனைத்து பள்ளிகளிலும் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், சட்டம் வலியுறுத்தும் குழந்தை உரிமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல் பள்ளி வளர்ச்சி, குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுவில் உறுப்பினர்களாக உள்ள நகர்ப்புற ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் கடமை மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
காலை உணவு திட்டம், பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் கல்வி முன்னேற்றம் ஆகியவற்றில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்று பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா, கணினி விவர பதிவாளர் குமரன், கருத்தாளர்கள் அறிவழகன், ஸ்டாலின்ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.