விழுப்புரத்தில்புற்றுநோய் விழிப்புணர்வு பஸ்கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


விழுப்புரத்தில்புற்றுநோய் விழிப்புணர்வு பஸ்கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பஸ்சை கலெக்டர், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பஸ்சை நேற்று காலை மாவட்ட கலெக்டர் சி.பழனி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புற்றுநோயின் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்று வந்தால் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைய முடியும். பெருமளவில் புற்றுநோயானது, புகையிலைப்பொருட்கள், மது அருந்துதல், அதிக கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல், ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துதல், மாசுகலந்த காற்றை சுவாசித்தல், பலருடன் உடலுறவு வைத்தல் போன்ற பல்வேறு காரணிகளால் உண்டாகிறது.

புகையிலைப்பொருட்கள், மது அருந்துவதை தவிர்த்தல், சத்தான சரிவிகித உணவு, காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்தல், தவறாமல் உடற்பயிற்சி, எப்போதும் சுறுசுறுப்பாக இருத்தல், பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் புற்றுநோய் வரமால் காத்திடலாம்.

பொதுமக்களுக்கு அறிவுரை

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கடந்த 67 வருடங்களாக புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் அதை தடுக்கும் பணியை செய்து வருகிறது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் புற்றுநோய் விழிப்புணர்வு பற்றியும் அதை தடுக்கும் முறையை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கலைநுட்பத்துடன் அதன் அறிகுறிகளை தகுந்த புகைப்படங்களுடன் கூடிய பஸ்சை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாக்கியது. இந்த விழிப்புணர்வு பஸ்சை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் புற்றுநோயினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் புற்றுநோயிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பஸ் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள், மாணவர்கள் விழிப்புணர்வு பஸ்சை பார்வையிட்டு பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கும் புற்றுநோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, புற்றுநோய் மருத்துவமனை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் சுரேந்திரன், இயன்முறை சிகிச்சை பிரிவு அலுவலர் சீனிவாசன் விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story