நாங்குநேரி ஊருக்குள் வராத அரசு பஸ் சிறைபிடிப்பு
நாங்குநேரி ஊருக்குள் வராத அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது.
நாங்குநேரி:
திருக்குறுங்குடியைச் சேர்ந்த பூலுடையார் உள்பட 5 பேர் நேற்று மதியம் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அரசு பஸ்சில் ஏறினார்கள். அவர்கள் நாங்குநேரிக்கு டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு கண்டக்டர் பஸ் ஊருக்குள் செல்லாது என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது இதுபற்றி தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து பஸ்சை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் விரைந்து வந்தனர். நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ இருதரப்பினரையும் அழைத்து பேசினார். அப்போது போக்குவரத்து நிர்வாகத்தினர் கூறுகையில், நாங்குநேரிக்கு செல்ல அனுமதி இல்லை. ஒன் டூ ஒன் பஸ் என்றனர். பொதுமக்கள் தரப்பில் தகவல் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்தனர். அப்போது விதிமீறல் இருப்பது தெரிய வந்தது. எனவே இருதரப்பினரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.