கார் கண்ணாடியை உடைத்து நகை-பணம் திருட்டு
கார் கண்ணாடியை உடைத்து நகை-பணம் திருட்டுபோனது.
சமயபுரம்:
திருட்டு
மதுரை முல்லை நகர், அக்ஷயா கார்டனை சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி ரேவதி (வயது 34). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து புதுச்சேரிக்கு செல்வதற்காக ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சென்றுகொண்டு இருந்தபோது அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றனர். சாப்பிட்டு முடித்தவுடன் வெளியே வந்த அவர்கள் காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கார் சீட்டில் வைக்கப்பட்டிருந்த 13 கிராம் மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.62 ஆயிரம் ஆகியவை இருந்த கைப்பையையும் காணவில்லை.
போலீசார் விசாரணை
பின்னர் இதுகுறித்து அவர்கள் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை வைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.