போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
தேவகோட்டை கண்டதேவி சாலையில் வசிப்பவர் ராக்கமுத்து (வயது 72). இவர் தேவகோட்டை திருவாடானை வட்டார தாழ்த்தப்பட்டோர் நல இயக்க துணை செயலாளராக இருந்து வருகிறார். இந்த இயக்கத்திற்காக கடந்த 1987-ம் ஆண்டு தேவகோட்டை பனிப்புலான்வயல் சின்னான்தாவு பகுதியில் ஏழை மாணவிகளுக்கு விடுதி கட்ட இடம் வாங்கப்பட்டது. அப்போது தற்காலிக தலைவராக இருந்த கருப்பையா பெயரில் இயக்கத்திற்காக வாங்கப்பட்டதாக அந்த பத்திரப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்து அதை மீண்டும் இயக்கத்தின் பெயருக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் துணை செயலாளர் ராக்கமுத்து வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரத்த நீதிபதி இதில் சம்பந்தப்பட்ட செய்யது பாருக் அலி (40), மகாலிங்கம் (47), ஜோதி (63), வைரவன் (48), சுந்தரம் (44) ஆகிய 5 பேர் மீது தேவகோட்டை நகர போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.