2-வது திருமணம் செய்த என்ஜினீயர் உள்பட 2 பேர் மீது வழக்கு
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த என்ஜினீயர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவைப்புதூரை சேர்ந்த சுபத்ரா (வயது 36) கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நான் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த என்ஜினீயர் ரகுநாத் (38) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது.
திருமணமான சமயத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும், பின்னர் நாகர்கோவில் பகுதியிலும் வசித்து வந்தோம்.
இதனிடையே எனது கணவர் 2016-ம் ஆண்டில் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டவர் என்பதும், அதை மறைத்து என்னை 2-வது திருமணம் செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து நான் கணவரிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து எனது 20 பவுன் நகையை திருப்பி தர மறுப்பதுடன், என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார்.
இதற்கு அவரது தாயார் மனோன்மணி (69) உடந்தையாக உள்ளார். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி அவர்கள் 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அதன் பேரில் போலீசார் என்ஜினீயர் ரகுநாத், அவரது தாய் மனோன்மணி ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.