மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி; தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு


மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி; தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Oct 2023 9:30 PM GMT (Updated: 14 Oct 2023 9:31 PM GMT)

பழனி அருகே மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயன்றதாக தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல்

பழனி அருகே மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயன்றதாக தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மணல் கடத்தல்

பழனியை அடுத்த ஆயக்குடி பொன்னிமலை சித்தன் கோவில் பகுதியில் இருந்து லாரியில் மணல் கடத்தி செல்வதாக நேற்று முன்தினம் ஆயக்குடி கிராம நிர்வாக அதிகாரி கருப்புசாமிக்கு புகார் வந்தது.

அதன்பேரில் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர், கிராம உதவியாளர் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை நிறுத்தி அவர்கள் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது.

தப்பி ஓட்டம்

இதையடுத்து லாரியை ஆயக்குடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லும்படி டிரைவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். லாரி முன்னால் செல்ல, வருவாய்த்துறையினர் பின்னால் வந்தனர்.

அப்போது லாரி டிரைவர், பின்னால் வந்த வருவாய்த்துறையினர் மீது மோதுவதுபோல் இயக்கினார். மேலும் அவருடன் சேர்ந்து காரில் வந்த சிலரும் வருவாய்த்துறையினர் மீது மோதுவது போல் சென்றனர். ஒருகட்டத்தில் லாரி மற்றும் காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

கொலை செய்ய முயற்சி

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கருப்புசாமி ஆயக்குடி போலீசில் புகார் அளித்தார். அதில், மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது எங்கள் மீது லாரியால் ஏற்றி கொல்ல முயன்றனர். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர், அதன் உரிமையாளர், காரில் வந்த பாலசமுத்திரத்தை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் சக்திவேல், பழனியை சேர்ந்த பாஸ்கரன் மற்றும் அவர்களுடன் வந்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து, பழனியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து கருப்புசாமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு

இதனையடுத்து அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை முயற்சி, சட்டவிரோத மணல் கடத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் சக்திவேல், பாஸ்கரன், அவர்களுடன் வந்த 2 பேர், லாரி டிரைவர், அதன் உரிமையாளர் என 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதில் பாஸ்கரன் தி.மு.க. நெசவாளர் அணி நிர்வாகி ஆவார். சக்திவேல், தி.மு.க. பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story