அங்க அடையாளங்களை சேகரிக்கும் சட்டத்தை எதிர்த்து வழக்கு - மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


அங்க அடையாளங்களை சேகரிக்கும் சட்டத்தை எதிர்த்து வழக்கு - மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

அங்க அடையாளங்களை சேகரிக்கும் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் திருவொற்றியூரைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்படுபவர்களின் கைரேகை பதிவுகள், கருவிழி மற்றும் விழித்திரை பதிவுகள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கவும், சேமித்துவைக்கவும் போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் குற்ற விசாரணை அடையாளச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தனிமனித சுதந்திரம், உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. அதனால் இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள்நல அரசான இந்திய அரசு இதுபோன்ற சட்டத்தை இயற்ற முடியாது. அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கும் இந்த சட்டப்பிரிவுகள் தன்னிச்சையானவை.

இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்தும், இதுதொடர்பான உத்தரவை எதிர்த்தும் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யாதது சட்டவிரோதமானது ஆகும். எனவே, இயற்கை நீதிக்கு முரணான இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர், இந்த வழக்குக்கு மத்திய அரசு 6 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.


Next Story