கோர்ட்டு தீர்ப்புகளை பதிவு செய்வது தொடர்பான வழக்கு - சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட்டு அவகாசம்


கோர்ட்டு தீர்ப்புகளை பதிவு செய்வது தொடர்பான வழக்கு - சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட்டு அவகாசம்
x

சுற்றறிக்கை பிறப்பிப்பது குறித்தும் அரசும், பதிவுத்துறையும் தீவிரமாக பரிசீலித்து வருவதாக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகாவில் உள்ள கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டும், சென்னை ஐகோர்ட்டும் பிறப்பித்த தீர்ப்பை பதிவு செய்யக் கோரி, மரக்காணம் சார் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோர்ட்டு தீர்ப்பளித்த நான்கு மாதங்களில் பதிவு செய்ய வேண்டும் என பதிவுச் சட்டம் கூறியுள்ளதாகவும், ஐகோர்ட்டின் தீர்ப்பு நகலைப் பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின் பதிவு செய்ய கோருவதை ஏற்க முடியாது எனவும் கூறி, பதிவு செய்ய மறுத்து மரக்காணம் சார் பதிவாளர் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, தீர்ப்பை பதிவு செய்ய சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை பதிவு செய்வதற்கு, பதிவுச் சட்டத்தில் உள்ள காலவரம்பு தடையாக இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பல வழக்குகளில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், இதுதொடர்பாக சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும், சுற்றறிக்கை பிறப்பிப்பது குறித்தும் அரசும், பதிவுத்துறையும் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், எனவே கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் ஜனவரி 31-ம் தேதி வரை தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.


Next Story