பிரேத பரிசோதனை அறிக்கையை டிஜிட்டல் முறையில் வழங்க கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


பிரேத பரிசோதனை அறிக்கையை டிஜிட்டல் முறையில் வழங்க கோரி வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை அறிக்கையை டிஜிட்டல் முறையில் வழங்க கோரிய வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

திருச்சியை சேர்ந்த டாக்டர் முகமது காதர் மீரான் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 35-க்கும் மேற்பட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை, விபத்தில் காயம் உள்ளிட்ட அறிக்கைகளை கைப்பட எழுதி கொடுக்கும் நடைமுறைதான் உள்ளது. இந்த நடைமுறையால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் விதமாக பஞ்சாப், அரியானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய தகவல் மையம் ஒரு மென்பொருளை உருவாக்கி கொடுத்துள்ளது. இதன்மூலம், இந்த மாநிலங்களில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் எல்லாம் இணையதளம் வாயிலாக டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகின்றன. இதுபோல தமிழ்நாட்டிலும் மென்பொருளை உருவாக்கி. பிரேத பரிசோதனை உள்ளிட்ட அறிக்கைகளை டிஜிட்டல் முறையில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இதன்மூலம் முறைகேடுகளை தடுக்க முடியும். பொதுமக்கள் மட்டுமல்லாமல், அதிகாரிகளும் அறிக்கைகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வக்கீல் முகமது அன்சார் வாதிட்டார். இதையடுத்து, இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story