அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குகள் - ஐகோர்ட்டில் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல்


அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குகள் - ஐகோர்ட்டில் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல்
x

அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. பின்னர் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை அடுத்து வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை ஐகோட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் வேலுமணி மீது பதிவான இரு வழக்குகளை எதிர்த்து தனி நீதிபதி முன்பாகத்தான் வழக்கு தொடர்ந்து வாதிட வேண்டுமென்றும், இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு உகந்தல்ல என வாதிடப்பட்டது.

புகாரில் முகாந்திரம் இல்லை என்கிற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை என்றும், தணிக்கை குழு அறிக்கையில் தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் கூறப்படாத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


Next Story