தனபாலுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தற்போது இருவரும் ஜாமீனில் உள்ளனர். மேலும் தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.
விசாரணை நடத்த முடிவு
இதைத்தொடர்ந்து கோடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தனபாலிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கோரி ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீலகிரி மாவட்ட நீதிபதி அப்துல் காதர், தனபாலிடம் விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி தேவையில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசாரே சம்மன் வழங்கி விசாரித்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனபாலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.