செல்போன் கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் செல்போன் கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்
பெண் பலாத்காரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா கொழுந்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அமுல்தாஸ் மகன் ஆரோக்கியசாமி என்கிற சுரேஷ் (வயது 32). இவர் திருக்கோவிலூர் பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கோளப்பாறை கிராமத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரோக்கியசாமி அந்த பெண்ணிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறினார். அதன்படி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அப்போது ஆரோக்கியசாமி, அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். அதன் பிறகு அப்பெண், ஆரோக்கியசாமியிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியசாமியை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட ஆரோக்கியசாமிக்கு 10ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஆரோக்கியசாமி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.