தணிக்கை குழு எதிர்ப்பு: திரிஷா படத்தில் 30 காட்சிகள் நீக்கம்


தணிக்கை குழு எதிர்ப்பு: திரிஷா படத்தில் 30 காட்சிகள் நீக்கம்
x
தினத்தந்தி 18 Dec 2022 1:49 AM GMT (Updated: 18 Dec 2022 2:33 AM GMT)

திரிஷா நடித்த 'ராங்கி' படத்தில் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது.

திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள 'ராங்கி' படத்தை எம்.சரவணன் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி உள்ளார். ராங்கி படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர். இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது. இதுகுறித்து படத்தின் டைரக்டர் சரவணன் கூறும்போது, ''முந்தைய சில படங்களில் இருந்த வார்த்தைகளையே ராங்கி படத்திலும் பயன்படுத்தினோம். ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினையில் சர்வதேச குழுக்கள் தொடர்பு இருப்பதுபோன்று திரைக்கதை அமைத்து இருந்தோம். இதனால் வெளிநாடுகள் சம்பந்தமான காட்சிகள் இருந்தன. அந்த பெயர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கிவிட்டனர். இதனால் படம் வெளியாவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டு விட்டது" என்றார்.


Next Story