ஓடும் ரெயிலில் பெண்களிடம் சங்கிலி பறிப்பு; 2 வாலிபர்கள் கைது


ஓடும் ரெயிலில் பெண்களிடம் சங்கிலி பறிப்பு; 2 வாலிபர்கள் கைது
x

ஓடும் ரெயிலில் பெண்களிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்களை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

ரெயில்களில் சோதனை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார புறநகர் ரெயில்களில் அடிக்கடி பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் சங்கிலி பறிப்பு மற்றும் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து திருவள்ளூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசலு, பாரதி மற்றும் போலீசார் திருவள்ளூர், புட்லூர், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, கடம்பத்தூர், செஞ்சி பானம்பாக்கம், மணவூர் திருவாலங்காடு போன்ற பகுதிகளில் ரெயில்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது ரெயிலில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

2 பேர் கைது

அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மேற்கண்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, அவர்கள் ஓடும் ரெயிலில் பெண் பயணிகளிடம் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் நடத்தி விசாரணையில் பிடிபட்ட நபர்கள் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், புதூர், வெஸ்ட் பார்ன் நகர், பாக்கியலட்சுமி தெருவை சேர்ந்த கவுரிசங்கர் (வயது 22) திருவள்ளூர் புட்லூர் ராமாபுரத்தை சேர்ந்த சூர்யா (22) என தெரிய வந்தது. மேலும் அவர்கள் ஓடும் ரெயிலில் பெண்களிடம் சங்கிலி பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 7 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story