சக்கரக்கோட்டை கண்மாயை தூர்வார கோரிக்கை
தண்ணீர் இன்றி வறண்ட சக்கரக்கோட்டை கண்மாயை தூர்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளின் சரணாலயமாக திகழும் சக்கரக்கோட்டை கண்மாயில் தண்ணீர் முழுவதும் வற்றிவிட்டது. பறவைகள் தண்ணீரின்றி வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும் கண்மாயை சுற்றியுள்ள பகுதிகளிலும் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதில் இந்த கண்மாயின் பங்கு பெருமளவு உள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் இன்றி மக்கள் அவதி அடைவார்கள். இதற்கு காரணம், சக்கரக்கோட்டை கண்மாய் கடந்த பல ஆண்டாக முறையாக தூர்வாரப்படவில்லை. தற்போது தண்ணீர் முழுவதும் வற்றிவிட்ட நிலையில் கண்மாய் முழுவதும் உள்ள கருவேல மரங்களை அகற்றி, பருவமழை தொடங்குவதற்கு முன்பாக கண்மாயை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனே செய்ய வேண்டும். மேலும் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வரும் வைகை தண்ணீரை வீணாக கடலில் கலக்க விடாமல் வரத்துகால்வாய் அமைத்து சக்கரக்கோட்டை கண்மாயில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.