தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!


தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 Dec 2023 12:11 AM GMT (Updated: 20 Dec 2023 5:39 AM GMT)

தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியானது, தற்போது லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இருக்கிறது.

சென்னை,

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி இரவு முதல் மழை கொட்டத் தொடங்கியது. இதனால் தென் மாவட்டங்கள் வெள்ள நீரால் தத்தளித்து வருகிறது.

அதிலும் திருச்செந்தூர் காயல்பட்டினத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி 95 செ.மீ. மழையும், நேற்று காலை 8.30 மணியுடனான 24 மணி நேரத்தில் 21 செ.மீ. என 2 நாட்களில் 116 செ.மீ. பெய்துள்ளது.

ஓராண்டில் பெய்யக்கூடிய மழை கடந்த 2 நாட்களில் கொட்டி தீர்த்து இருக்கிறது. இதேபோல் திருச்செந்தூரில் நேற்று முன்தினம் காலை வரை 69 செ.மீ., நேற்று காலை வரை 23 செ.மீ. என 92 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த சூழலில் நேற்று காலையில் இருந்து மழை ஓரளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளநீர் சற்று வடிய தொடங்கியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் மாவட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சியானது, தற்போது லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இருக்கிறது.

இந்நிலையில் வளிமண்டல சுழற்சி தொடர்ந்து நிலவுவதால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்த 2 நாட்களை தொடர்ந்து, அடுத்து வரும் 3 அல்லது 4 தினங்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். அதன் பின்னர், வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story