தமிழகம், புதுச்சேரியில் 6-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகம், புதுச்சேரியில் 6-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2024 12:30 AM GMT (Updated: 1 Jan 2024 8:13 AM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 6-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை,

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும்.

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 6-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வருகிற 3-ந் தேதி வரை மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மேற்கூறிய பகுதிகளில் மீனவர்கள் 3-ந் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story