சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி.!


சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி.!
x
தினத்தந்தி 19 Aug 2023 9:02 PM GMT (Updated: 19 Aug 2023 9:13 PM GMT)

நிலாவின் சுற்றுப்பாதையில் 25 x 134 கி. மீ. தூரத்தில் சந்திராயன் -3 உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சென்னை,

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது. இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, லேண்டர் இமேஜர் (எல்ஐ) கேமரா-1 மூலம் எடுக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் படங்களை, டுவிட்டரில் பகிர்ந்தது. படங்களின் தொகுப்பு நிலவில் உள்ள வெவ்வேறு பள்ளங்களைக் காட்டியது. அவற்றில் ஒன்று ஜியோர்டானோ புருனோ பள்ளம், நிலவில் உள்ள பெரிய பள்ளங்களில் ஒன்றாகும்.

இந்த சூழலில் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், தன்னைத் தானே செல்பி எடுத்து பூமிக்கு அனுப்பும் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சந்திரயான்-2 திட்டத்தில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சந்திரயான்-3 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வருகிற 23-ந்தேதி வெற்றிகரமாக இறங்க உள்ளது. அப்போது பழுதோ, சிக்கல்கள் ஏற்பட்டாலோ அதனை நிவர்த்தி செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, சந்திரயான்-3 திட்டமிட்டபடி சாதிக்கும்.

நிலவில் நீர் உள்ளதை கண்டறிந்துள்ளதைத் தொடர்ந்து வேறு மூலப் பொருள்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பயணம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. சந்திரயான் நிலவில் இறங்க உள்ள இடம் கரடு, முரடாக இல்லாமல் தரையிறங்க ஏதுவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன்தொடர்ச்சியாக சந்திரயான்-4 திட்டமானது நிலவில் இறங்கி அங்கு கனிம பொருட்கள் இருப்பின் அதனை பூமிக்கு எடுத்து வரும் வகையில் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. நிலவில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளும், வாய்ப்புகளும் உள்ளன. நிலவில் நீர் உள்ளதை உறுதி செய்திருப்பதால் ஆக்சிஜன், ஹைட்ரஜன் உற்பத்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. அங்கு மனிதனை அனுப்புவதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. 1960-ம் ஆண்டுகளில் நிலவில் முதலில் கால் பதிப்பது யார் என உலக நாடுகளுக்கு இடையே போட்டி இருந்தது. தற்போது அந்த போட்டி இல்லை. உலக நாடுகளின் அமைதிக்கான இடமாக நிலவு இடம் பெற வேண்டும். இந்தியாவின் சந்திரயான்- 3, ரஷியாவின் லூனா-25 ஆகியவற்றுக்கு இடையே போட்டி என்று கருத வேண்டியதில்லை. இரண்டுமே ஒரே மாதிரியான பயணத்தில் தான் உள்ளன.

இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் வேகம் குறைவாக இருந்த போதிலும், வெற்றி வாய்ப்பு சிறப்பாகவே உள்ளது. அதே நேரத்தில் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெறும் கலன்களையும், ஏவுகணைகளையும் மட்டுமே இஸ்ரோ பயன்படுத்தி வருகிறது. இதற்கு பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகியவை சிறந்த உதாரணமாகும்.

இந்தியா மட்டுமின்றி ரஷியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து நிலவு குறித்த ஆய்வுகளை செய்ய தயார் நிலையில் உள்ளன. பூமி அருகே அமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆய்வு மையத்தைப் போன்று, நிலவுக்கு அருகிலோ அல்லது நிலவிலோ சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உருவாகும். அதில், இந்தியாவும் தனது பங்களிப்பை சிறப்பாக மேற்கொள்ளும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டரில், "இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் நடவடிக்கையானது எல்எம் சுற்றுப்பாதையை 25 கி.மீ. x 134 கி.மீ.க்கு வெற்றிகரமாக குறைத்துள்ளது. தொகுதி உள் சோதனைகளுக்கு உட்பட்டு, நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயத்திற்காக காத்திருக்கும். இயங்கும் இறங்குதல் ஆகஸ்ட் 23, 2023 அன்று, சுமார் 17.45 மணி நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அதில் தெரிவித்துள்ளது.



Next Story