மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்தின் மாற்றங்களை உடனுக்குடன் வெளியிட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்தின் மாற்றங்களை உடனுக்குடன் வெளியிட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x

மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்தில் உள்ள மாற்றங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித் தடத்தில் மாதவரம் பால் பண்ணை மற்றும் மூலக்கடைக்கு இடையில், தபால் பெட்டி நிறுத்தம் அமைக்க 2018-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

ஆனால், தற்போது தபால் பெட்டி நிறுத்தத்தை நீக்கிவிட்டு, முராரி ஆஸ்பத்திரி நிறுத்தத்தை அமைக்கும் விதமாக திட்டம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். தபால் பெட்டி நிலையத்தை கைவிடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை திட்டத்தின்படி தபால் பெட்டி நிறுத்ததை மீண்டும் அமைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், மாதவரம் கே.கே.ஆர்.நகர் குடியிருப்பு நலச்சங்கத்தின் செயலாளர் லூர்துராஜ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து விளக்கம் அளிக்க மெட்ரோ ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, "திருத்தப்பட்ட சீரமைப்பு வரைப்படம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது'' என்று கூறினார்.

மனுதாரர் தரப்பில் வக்கீல் தமிழரசன் வாதாடினார், இதையடுத்து நீதிபதிகள், "தபால் பெட்டி நிலையத்தை அமைக்கும் பணியை நிறுத்தியதற்கு என்ன காரணம்? என்பது குறித்த விளக்கத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை ஜூன் 15-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதேநேரம், மெட்ரோ ரெயில் வழித் திட்டத்தில் உள்ள மாற்றங்களை பொதுமக்களுக்கு தெரியும் விதமாக உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.


Next Story