காரைக்குடி பஸ் நிலையத்தில் பரபரப்பு: பஸ் கண்டக்டரை ஹெல்மெட்டால் தாக்கிய 3 பேர் கைது
காரைக்குடி பஸ் நிலையத்தில் பஸ் கண்டக்டரை ஹெல்மெட்டால் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி
காரைக்குடி பஸ் நிலையத்தில் பஸ் கண்டக்டரை ஹெல்மெட்டால் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணை கீழே இறக்கி விட்டதாக புகார்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 37) இவர் காரைக்குடி-பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் பாலமுருகன் பணியில் இருந்தபோது ஒரு பெண் பஸ்சில் ஏறி வைரவபுரம் செல்ல வேண்டும். டிக்கெட் கொடுங்கள் என்று கூறியுள்ளார். கண்டக்டர் பாலமுருகன் இந்த பஸ் எடுக்க நேரம் ஆகும். இதற்கு முன்பாக வேறு பஸ்கள் உள்ளன. அதில் செல்லுங்கள் என்று கூறி அப்பெண்ணை பஸ்சிலிருந்து கீழே இறக்கி விட்டதாக தெரிகிறது.
பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
உடனே அந்த பெண் தனது உறவினர்களுக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். அவரது உறவினர்கள் 5 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கண்டக்டர் பாலமுருகனை ஹெல்மெட்டால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக சந்தோஷ்குமார்(27), வசீகரன்(22), ரஞ்சித்குமார்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் முரளி, யுவராஜ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.