அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா
ராவத்தநல்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி அருகே உள்ள ராவத்தநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து மேல தாளம் இசைக்க அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். பின்னர் ஓம்சக்தி, பராசக்தி என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேருக்கு முன்பு திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் அம்மன், சிவன், விநாயகர், காளி போன்ற சாமிகளின் வேடம் அணிந்து சென்றனர். கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று ராவத்தநல்லூர் மயானத்தை சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து மயானத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த நவதானியங்கள் முன்பு ஆடு மற்றும் கோழிகள் பலியிடப்பட்டு சூறை விடப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். முன்னதாக தேரை இழுத்து வந்த போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தேர் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதில் அவரது கால் பெருவிரல் நசுங்கியதால் வலி தாங்க முடியாமல் கத்தினார். பின்னர் அவரை பக்தர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.