கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்
புரட்டாசி திருவிழாவையொட்டி கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புரட்டாசி திருவிழா
கரூர் தாந்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வருகிற (அக்டோபர்) 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கல்யாண வெங்கடரமணசுவாமி கோவிலில் கடந்த 18-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னபறவை வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி அனுமன் வாகனம், வெள்ளி கருட வாகனம், ஐந்து தலை நாக வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 24-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. புரட்டாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி வெங்கடரமணசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தேரை வடம் பிடித்தனர்...
தொடர்ந்து கல்யாண வெங்கடரமணசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆலய மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க திருத்தேரில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காலை 8.30 மணியளவில் திரளான பக்தர்கள் இணைந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா.. என கோஷம் எழுப்பினர். திருத்தேர் கோவிலை சுற்றி ஆடி அசைந்தபடி வந்தது. பின்னர் திருத்தேர் நிலையை வந்தடைந்தது.
இதில் கரூர், தாந்தோன்றிமலை மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி கோவிலை சுற்றிலும் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாதபடி பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தன.
போலீசார் பாதுகாப்பு
புரட்டாசி தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூரில் இருந்து தாந்தோன்றிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த தேரோட்டத்தில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், பழனி முருகன் ஜுவல்லரி பாலமுருகன், உதவி ஆணையர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 5.30 மணியளவில் வண்டிக்கால் பார்த்தல் நடைபெற்றது.
27-ந்தேதி காலை அமராவதி நதியில் தீர்த்தவாரியும், அக்டோபர் மாதம் 6-ந்தேதி முத்து பல்லாக்கும், 8-ந்தேதி ஆளும் பல்லாக்கும், 9-ந்தேதி வேள்வியும் நடைபெற உள்ளது.