ஈரோடு அருகே தைப்பூச திருவிழாவில் திடீரென கவிழ்ந்த தேர்.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்


ஈரோடு அருகே தைப்பூச திருவிழாவில் திடீரென கவிழ்ந்த தேர்.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்
x

வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.

ஈரோடு,

தமிழகம் மட்டுமல்லாது உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் இன்று தைப்பூசத்திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். பழனி, திருச்செந்தூர் உட்பட அறுபடை வீடுகளிலும், மாநிலம் முழுவதும் உள்ள முருகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் சில கோவில்களில் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டையம்பாளையம் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற பொன்மலை ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவில் வீதியில் உலா வந்த தேர் வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழிக்குள் தேரின் சக்கரங்கள் இறங்கியது. ஆனால், இதனை அறியாது பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தேர் கவிழ்வதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதில் நல்வாய்ப்பாக பக்தர்கள் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தேர் மீட்டகப்பட்டது. தைப்பூச நாளில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story