பேரம்பாக்கம் அருகே லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம்


பேரம்பாக்கம் அருகே லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம்
x

பேரம்பாக்கம் அருகே லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மரகதவல்லி தாயார் சமூக லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதியன்று கொடியேற்றம் தொடங்கியது. இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் வருகின்ற 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் காலை, மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு சிம்ம வாகனம், அம்சவாகனம், சூரிய பிரபை வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை வாகனம், யாளி வாகனம், யானை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி விழா நடைபெற உள்ளது.

இவ்விழாவின் 7-ம் நாளான நேற்று காலை 6 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சாமி எழுந்தருளிய பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதையொட்டி, நரசிங்கபுரம், பேரம்பாக்கம், களாம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், மப்பேடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று முழக்கங்களை எழுப்பியபடி பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் கோவில் எதிரே உள்ள திருக்குளத்தில் சாமிக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.


Next Story