தனியார் சரக்கு குடோனில் கன்டெய்னர் பெட்டியில் இருந்து ரசாயன கசிவு; பொதுமக்களுக்கு கண் எரிச்சல்


தனியார் சரக்கு குடோனில் கன்டெய்னர் பெட்டியில் இருந்து ரசாயன கசிவு; பொதுமக்களுக்கு கண் எரிச்சல்
x

மணலி அருகே தனியார் குடோனில் கன்டெய்னர் பெட்டியில் இருந்து ரசாயன கசிவு காரணமாக பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.

சென்னை

மணலி அருகேயுள்ள அரியலூரில் தனியாருக்கு சொந்தமான சரக்கு குடோன் உள்ளது. நேற்று முன்தினம் இந்த குடோனில் இருந்து ஒரு விதமான ரசாயன கசிவு ஏற்பட்டது. இந்த கசிவு அருகில் உள்ள கடப்பாக்கம், கன்னியம்மன்பேட்டை போன்ற பல கிராமங்களுக்கும் பரவியதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், லேசான மயக்கம் ஏற்பட்டது. இரவு முழுவதும் ரசாயன கசிவு இருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், மணலி மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மணலி மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை அரியலூர் பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட சரக்கு குடோனை ஆய்வு செய்தனர்.

அங்கு ஏராளமான கன்டெய்னர் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் எதில் இருந்து ரசாயனம் கசிந்தது? என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் நிபுணர்கள் மூலம் கசிவு ஏற்பட்ட கன்டெய்னர் பெட்டியை கண்டுபிடித்தனர். அதில் வைக்கப்பட்டிருந்த பேரல் ஒன்றிலிருந்துதான் ரசாயன கசிவு ஏற்படுவது தெரிந்தது. உடனடியாக கசிவை தடுத்து நிறுத்தினர்.

மேலும் விசாரணையில் அந்த கன்டெய்னர் பெட்டி மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதும், அதில் எச்.ஐ.வி. நோய்க்கு மருந்து தயாரிக்க பயன்படும் ரசாயன மூலப்பொருட்கள் அடங்கிய பேரல்கள் இருப்பதும் தெரிந்தது. கன்டெய்னர் பெட்டியில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக பேரல்களில் இருந்த ரசாயனம் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த கன்டெய்னர் பெட்டி பாதுகாப்புடன் அகற்றப்பட்டு ரசாயன கசிவு சரி செய்யப்பட்டது. பின்னர் ரசாயன மூலப்பொருள் அடங்கிய பேரல்கள் இருந்த கன்டெய்னர் பெட்டி ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அந்த குடோனில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நிலைகள் குறித்து மணலி மண்டல அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு துறை துணை இயக்குனர் பாலமுருகன் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story