சென்னை: மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் இடத்தில் விபத்து - 3 பேர் படுகாயம்
மெட்ரோ ரெயில் பணிக்காக கம்பிகளை இறக்கிய போது பஸ் மீது விழுந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
போரூர்,
சென்னை மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரத்தில் மெட்ரோ ரெயில் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக சாலையின் நடுவே ராட்சத தூண்கள் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 30அடி நீளத்திற்கு கட்டப்பட்ட கம்பிகளை கண்டெய்னர் லாரி மூலம் ஏற்றி வந்து பின்னர் அதை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தி "காண்கீரிட்" போடும் பணி நேற்று இரவு நடைபெற்று வந்தது.
அதிகாலை 4மணி அளவில் கண்டெய்னர் லாரியில் இருந்த கம்பிகளை கிரேன் மூலம் இறக்கிக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் நோக்கி போக்குவரத்து கழக ஊழியர்கள் 8பேருடன் வந்த மாநகர பஸ் மீது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பிகள் வேகமாக மோதியது.
இதில் பஸ்சின் முன் பகுதி அப்பளம் போல உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் அய்யாதுரை (வயது 52), மற்றொரு டிரைவர் பூபாலன் (45), கண்டெய்னர் லாரி டிரைவர் ரப்ஜித் குமார் ஆகிய 3 பேரும் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் சிக்கி காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.