சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 5 Dec 2023 4:51 PM GMT (Updated: 6 Dec 2023 9:54 AM GMT)

60 சதவீதம் மழை நீர் வடிந்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

60 சதவீதம் மழை நீர் வடிந்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னமலை, தாடண்டர் நகர், ஐந்து விளக்கு ஆலந்தூர் சாலை, அப்பாவு நகர், ஜோதியம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் மிக்ஜம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, ரொட்டி, பால், மருத்துவ வசதி ஆகியவற்றை வழங்கியதோடு, நிவாரண பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் வடகிழக்கு பருவமழை என்பது வேறு எந்த மழையின் அளவையும் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு மிக கனமழையாக இருக்கின்றது. இதுவரை இல்லாத அளவு வடகிழக்கு பருவமழையின் அளவு 29 சதவீதம் கூடுதலாக பெய்திருக்கிறது. இதுவரை வந்துள்ள புயல்களில் அதிக.அளவிலான பாதிப்பினை ஏற்படுத்திய புயலும் இது தான்.

மழை நீரை கடல் உள்வாங்க வேண்டும். ஆனால், 10 முதல் 20 சதவீதம் மழைநீரே உள்வாங்கப்பட்டது. இதனால் தான் சென்னையின் பெருவாரியான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தற்போது 60 சதவீதம் மழை நீர் வடிந்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த மழையின் அளவைவிட தற்போது 2 மடங்கு மழை பெய்து இருக்கிறது. முதல்-அமைச்சர் மழை நீர் வடிகால்களை கட்டியிருப்பதால் மிகப் பிரதான சாலைகளில் மழை நீர் வடிந்து, போக்குவரத்து சீராகிக் கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 40 ஏரிகளில் உள்ள உபரி நீர் அந்தப் பகுதிகளில் சூழ்ந்து இருக்கிறது. ஆகையால் இன்னும் 20 மணி நேரத்தில் அனைத்து மழைநீரும் வடிந்து சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story