சேர்ந்து எடுத்த போட்டோவை வெளியிடுவதாக வாலிபர் மிரட்டல்.. கல்லூரி மாணவி தற்கொலை
காதலனின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பேசுவதை கிருஷ்ணகுமாரி நிறுத்திவிட்டதாக தெரிகிறது.
சென்னை:
சென்னை பெரம்பூர் பாரதி முதல் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி (வயது 18). சென்னையில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார்.
மாணவி கிருஷ்ணகுமாரி, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலனின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பேசுவதை கிருஷ்ணகுமாரி நிறுத்திவிட்டார். ஆனால் அந்த வாலிபர் தன்னுடன் பேசும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
இல்லாவிட்டால் காதலிக்கும் போது இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாகவும், சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த மாணவி கிருஷ்ணகுமாரி, கடந்த 2-ந் தேதி இரவு வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மாணவி கிருஷ்ணகுமாரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.