சென்னையில் வெள்ள தடுப்பு பணி: நாளை ஆய்வு செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார் .
சென்னை,
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தற்போதைய கணினி மாதிரியின் அடிப்படையில் இம்மாதம் (அக்டோபர்) 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், இயல்பை ஒட்டியே மழை பெய்வதற்கான சூழல் உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், வெள்ள தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) ஆய்வு செய்ய உள்ளார் .
அசோக் நகர், கொளத்தூர் வேலவன் நகர், டாக்டர் அம்பேத்கர் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளார். புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட இடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
அப்போது வெள்ள தடுப்பு பணி தொடர்பாக அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்த உள்ளார். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.