சென்னை உணவுத்திருவிழா; 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை


சென்னை உணவுத்திருவிழா; 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை
x

பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு வகைகள் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.

சென்னை,

உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

உணவு வீணாகுவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இங்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் ஆகியவை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், உணவுத்திருவிழாவின் 2-வது நாளான இன்று பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு வகைகள் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக நொறுக்குத்தீனிகளுக்கு பதிலாக சத்தான உணவுகளை தாமாகவே தயாரிக்கும் விதமாக அடுப்பில்லா சமையல் என்ற பெயரில் பல்வேறு உணவு வகைகளை தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் சத்துமாவு உருண்டை, சிறுதானிய உருண்டை, ப்ரூட் சாலட், மசாலா பயிறு உள்ளிட்ட 10 வகையான திண்பண்டங்களை மாணவர்களே தயார் செய்தனர். இதில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.


Next Story