மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக மகளிர் உதவி எண் தொடக்கம் - சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு


மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக மகளிர் உதவி எண் தொடக்கம் - சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக மகளிர் உதவி எண்ணை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற, பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கி வருகிறது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, சர்வதேச மகளிர் தினத்தன்று, பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த பிரத்யேக மகளிர் உதவி எண் 155370-ஐ அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.

மகளிர் உதவி எண் 155370 என்பது 24/7 பெண்களால் இயக்கப்படும் சேவையாகும். மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண் பல சேவைகளை வழங்குகிறது, இதில் அவசரகால பதில், தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது, இந்த உதவி எண் BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

மகளிர் உதவி எண் தவிர, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்கனவே பல முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்புக் கலைகள் மற்றும் சுய பாதுகாப்பு நுட்பங்களில் பயிற்சி பெற்ற "பிங்க் ஸ்குவாட்" பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் குழு மெட்ரோ ரெயில் நிலையங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நடைமேடையில் மிகவும் வெளிச்சத்துடன் கூடிய மகளிருக்கென தனியான காத்திருப்பு பகுதி, மகளிருக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. ஆடவர் மற்றும் மகளிருக்கென தனியாக, சுத்தமான பொது கழிப்பிடம் மற்றும் இருபாலருக்கான கழிப்பறைகள், தெளிவான மற்றும் அறியும்படியான அடையாளங்களுடன் அனைத்து நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

பச்சிளம் குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களுக்கென, டயபர் மாற்றுவதற்கான வசதியுடன் பாலூட்டும் அறைகள் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தொல்லைகளைத் தடுத்தல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த அவசரங்களுக்காக தனியாக "உதவி எண் - 155370" 24/7 அடிப்படையில் நமது பயணிகளுக்காக தயாராக உள்ளன.

மெட்ரோ ரெயில்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்:

ஒவ்வொரு ரெயிலிலும் மகளிருக்காக ஒரு பெட்டி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர் ஆகியோருக்கென 8 இருக்கைகள் ரெயிலில் அடையாள குறியீடுகளுடன் ஒதுக்கப்பட்டுள்ளன. ரெயிலின் முதல் மற்றும் கடைசி பெட்டியில், சக்கர நாற்காலிகளுக்கென தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் நிலையங்களை சுற்றுயுள்ள பாதுகாப்பு அம்சங்கள்:

அனைத்து ரெயில் நிலையங்களில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பாலியல் துன்புறுத்துதல் குறித்து, முற்றிலும் சகிப்பு தன்மையற்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இணையதளத்தில் மெட்ரோ ரெயில் நிலைய வரைபடங்கள், ரெயில் நேரம், மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வசதிகள் மற்றும் அணுகல் அம்சங்கள் உள்ளிட்ட விரிவான பயணிகளின் தகவல்கள் உள்ளது.

சென்னை மெட்ரோ ரெயிலில் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவுகளில் உள்ள வேலையிடங்களுக்கு மகளிர் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும் உள்ளூரில் உள்ள மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ரெயில் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளை விரைந்து அணுகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவோருக்கு படிகள் அல்லாத அனைவரும் அணுகக்கூடிய வழித்தடங்கள், பார்வையற்றோருக்கு உதவியாக தொட்டுணரக்கூடிய தரையமைப்பு ஆகியவைகள் இவற்றில் அடங்கும். ஆங்காங்கே, தெளிவான அடையாள குறியீடுகள் பொருத்தப்பட்டுள்ளன. முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்து தர நிலைய கட்டுப்பாட்டாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து ரெயில் நிலையங்களில் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களில் நன்கு வெளிச்சமூட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதியை எளிதில் அணுகுவதற்கு ஏதுவான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து பெண் பயணிகளும் மகளிர் உதவி எண் 155370-ஐ (தற்போது BSNL பயன்பாட்டாளர்கள் மட்டும்) தங்கள் தொலைபேசியில் சேமித்து, சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் போது தேவை ஏற்பட்டால் தயங்காமல் அதைப் பயன்படுத்துமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Next Story