சென்னையை இந்தியாவின் 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் தீர்மானம்


சென்னையை இந்தியாவின் 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் தீர்மானம்
x

திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தொல்.திருமாவளவன் வாசித்தார்.

திருச்சி,

திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தொல்.திருமாவளவன் வாசித்தார். அந்த தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

முழுமை பெறாத ராமர் கோவிலை திறந்து அரசியல் ஆதாயம் தேடும் பா.ஜனதா அரசின் நடவடிக்கைக்கு வன்மையான கண்டனம் தெரிவிப்பது, ராமர் கோவில் திறப்புவிழா நடந்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற ஆணையின்படி அங்கு மசூதி கட்டுவதற்கான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

சென்னையை இந்தியாவின் 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும். இதற்காக சென்னையில் உச்சநீதிமன்ற கிளையையும், நாடாளுமன்ற கட்டிடம் ஒன்றையும் அமைக்க வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். அதனை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும். தொகுதி மறுசீரமைப்பில் தென்மாநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்றத்தாழ்வற்ற பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் கவர்னர் பதவி ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக இந்தியா கூட்டணி வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்து, கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை தூக்கி எறிய வேண்டும்.

இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பன உள்பட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story