சென்னை: வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் - இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து 3.5 கிலோ நகை மீட்பு...!


சென்னை: வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் - இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து 3.5 கிலோ நகை மீட்பு...!
x

சென்னை வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ,சூர்யா ஆகிய 3 பேர் கைது செய்தனர்.

வங்கி கொள்ளை தொடர்பாக கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவத்தில் இதுவரை 28 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.

இந்த நிலையில், அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அச்சரப்பாக்கம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மீது விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story