சென்னை: கடலில் குளிக்கச் சென்று மாயமான 3 வடமாநில தொழிலாளர்களின் உடல் கரை ஒதுங்கியது...!


சென்னை: கடலில் குளிக்கச் சென்று மாயமான 3 வடமாநில தொழிலாளர்களின் உடல் கரை ஒதுங்கியது...!
x

மாயமான 4 வடமாநில தொழிலாளர்கள்  

தினத்தந்தி 26 Dec 2022 3:58 PM IST (Updated: 26 Dec 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய 4 வடமாநில தொழிலாளர்களில் 3 பேரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

சென்னை,

சென்னை மணலி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி. என்ற மத்திய அரசு நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் ஒருவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவரிடம் வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஆண்டார்குப்பம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று விடுமுறை என்பதால் இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 25 பேர் திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் கடற்கரையை சுற்றி பார்க்க வந்தனர். அவர்களிடம் 8 தொழிலாளர்கள் மட்டும் கடலில் இறங்கி குளித்தனர். மற்றவர்கள் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கடலில் ஆர்ப்பரித்து வந்த ராட்சத அலை, 8 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் 4 பேர் சாதுரியமாக தப்பித்து கரை வந்தனர். ஆனால் முஸ்தகீன் (வயது 22), அவருடைய தம்பி இப்ராஹிம் (20), வஷீம் (26) மற்றும் புர்கான் (28) ஆகிய 4 பேரும் ராட்சத அலையில் சிக்கி கடலில் மாயமானார்கள்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடலில் மாயமான 4 தொழிலாளர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடலில் குளிக்கச் சென்று ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேரில் 3 பேரின் உடல் கரை ஒதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story