செல்போன் பறித்த பதற்றத்தில் மின்சார ரெயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பலி; போலீஸ் அதிரடியில் 2 வாலிபர்கள் கைது


செல்போன் பறித்த பதற்றத்தில் மின்சார ரெயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பலி; போலீஸ் அதிரடியில் 2 வாலிபர்கள் கைது
x

சென்னையில் செல்போனை பறித்ததால் ஏற்பட்ட பதற்றத்தில் மின்சார ரெயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் பறிப்பு

சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பிரீத்தி (வயது 22). இவர் திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணியாற்றி வந்தார். நாள்தோறும் கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூருக்கு மின்சார ரெயிலில் செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2-ந்தேதி பிரீத்தி கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூருக்கு ரெயிலில் சென்றார். அவர், இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் இறங்கும்போது நடைமேடையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் பிரீத்தியின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர். அப்போது ரெயிலில் இருந்து நிலைதடுமாறி பிரீத்தி கீழே விழுந்தார். இதில், பிரீத்திக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றார். இதனையடுத்து, அங்கிருந்த சக பயணிகளை பிரீத்தியை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்தார்

இந்த நிலையில், பிரீத்தி நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், பிரீத்தியின் செல்போன் சிக்னலை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்தனர். அதில் செல்போன் சிக்னல் பெசன்ட் நகரை குறிப்பிட்டு காண்பித்தது.

2 பேர் கைது

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ராஜீ (29) என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அடையாரை சேர்ந்த மணிமாறன் (19), பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (27) ஆகிய 2 பேரும் கடந்த 2-ந்தேதி செல்போனை ரூ.2 ஆயிரத்திற்கு விற்றது தெரியவந்தது. பின்னர், மணிமாறன் மற்றும் விக்னேஷ் இருவரையும் பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.


Next Story