செஸ் ஒலிம்பியாட்: நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு


செஸ் ஒலிம்பியாட்: நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
x

செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் தொடக்க விழாவுக்கான அனைத்து விதமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

இதையொட்டி, தொடக்க விழாவுக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அரங்கில் ஆங்காங்கே பிரமாண்ட செஸ் காய்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர ஒலிம்பியாட் போட்டி சின்னமான 'தம்பி' உருவ பொம்மைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கின்றன.

அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் தொடக்க விழாவுக்கான அனைத்து விதமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் வைக்கும் பணியும் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார். நாளை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அரங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் மெய்யநாதன், எ.வ.வேலு, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story