சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக ஆய்வு


சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக ஆய்வு
x

கோப்புப்படம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோவில் நகைகளை சரிபார்க்கும் பணியை தொடங்கினர்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் இன்றி வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சில நேரங்களில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நகைகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.

அவ்வாறு பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் முதன் முதலாக கடந்த 1955-ம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் கோவிலில் நகைகள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு கோவிலில் நகைகளை சரிபார்த்து மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டது.

இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் நகைகளை மீண்டும் சரிபார்க்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு அவர்கள் கடிதம் எழுதினர். அதில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத நடராஜர் கோவிலில் நகை சரிபார்ப்பு செய்ய அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்து இருந்தனர்.

இருப்பினும் கடந்த ஜூன் மாதம் இந்து சமய அறநிலையத்துறையினர் நடராஜர் கோவிலுக்கு நகை சரிபார்ப்பு பணிக்காக சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு பொது தீட்சிதர்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் இந்துசமய அறநிலையத்துறையினர் நகையை சரிபார்க்காமல் சென்று விட்டனர். அதனை தொடர்ந்து நடராஜர் கோவில் நகைகளை சரிபார்க்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி பொது தீட்சிதர்களுக்கு அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதற்கு மறுப்பு தெரிவித்து பதிலுக்கு பொதுதீட்சிதர்கள் இந்து சமய அறநிலையத்துறையினருக்கு கடிதம் அனுப்பினர். தொடர்ந்து இரு தரப்பினரும் மாரி, மாரி கடிதம் அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் இந்து சமய அறநிலையத்துறையின் தங்க நகைகள் மதிப்பீட்டு குழுவினரான கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி, திருவண்ணாமலை மாவட்ட துணை ஆணையர் குமரேசன், விழுப்புரம் மாவட்ட துணை ஆணையர் சிவலிங்கம், நகை மதிப்பீட்டு வல்லுநர்கள் திருச்சி தர்மராஜன், திருவண்ணாமலை குமார், விழுப்புரம் குருமூர்த்தி ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.

அவர்கள் கோவில் தேவசபையில் அமர்ந்து நகைகளை ஆய்வு செய்வது தொடர்பாக தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தி நகை இருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து நகைகள் இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கு கோவில் நகைகளை தீட்சிதர்கள் எடுத்து அதிகாரிகளிடம் காண்பித்தனர். அதனை அவர்கள் சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நகை சரிபார்ப்பு பணியையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சிதம்பரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று தொடர்ந்து 2வது நாளாக ஆய்வு நடத்த உள்ளனர். கோவில் ஆவணங்கள், தங்க நகைகள் தொடர்பான ஆய்வு இன்றும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story