சிதம்பரம்: பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் - பாலிடெக்னிக் மாணவன் கைது


சிதம்பரம்: பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் - பாலிடெக்னிக் மாணவன் கைது
x

பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் தொடர்பாக பாலிடெக்னிக் மாணவனை கைது செய்தனர்.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவிக்கு, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் தாலி கட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வைரலாகும் அந்த வீடியோவில், சிதம்பரம் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே உள்ள பயணியர் நிழற்குடையில் சீருடையில் அரசு பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவி ஒருவர் வந்து அமர்கிறார்.

அப்போது அங்கு வந்த கீரப்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர், மாணவியின் அருகில் அமர்கிறார். பின்னர், மாணவியின் கழுத்தில் அந்த மாணவர் தாலியை கட்டினார். அருகில் நின்ற மாணவியின் தோழிகள் சிலர் அவர்களுக்கு அட்சதையை தூவி வாழ்த்துகளை தெரிவிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்த வீடியோவை பாா்த்து அதிர்ச்சியடைந்த சிதம்பரம் போலீசார் சம்பந்தப்பட்ட அந்த மாணவி மற்றும் மாணவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் அவர்களது பெற்றோரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரம்யா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பள்ளி மாணவிக்கு தாலி காடிய விவகாரம் தொடர்பாக பாலிடெக்னிக் மாணவரை கைது செய்தனர். இரண்டு நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் மாணவனை கைது செய்துள்ளனர்.

மேலும், பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story