சிதம்பரம் கோவில் கட்டுமானம் தொடர்பான வழக்கு - பொது தீட்சிதர்களுக்கு ஐகோர்ட்டு கேள்வி

எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொது தீட்சிதர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
சென்னை,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் பொது தீட்சிதர்கள் கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாகவும், இந்த கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது என பொது தீட்சிதர்களுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து சிதம்பரம் கோவிலில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொது தீட்சிதர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறநிலையத்துறை ஆணையரின் மனுவுக்கு பதிலளிக்கும்படி பொது தீட்சிதர்கள் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.






