நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதல்-அமைச்சர் பதில் அளிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி


நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதல்-அமைச்சர் பதில் அளிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி  பேட்டி
x
தினத்தந்தி 15 Feb 2024 8:22 AM GMT (Updated: 15 Feb 2024 8:51 AM GMT)

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 90 சதவீத அறிவிப்புகளை திமுக நிறைவேற்றவில்லை. ஆனால் கூட்டங்களுக்கு செல்லும் அமைச்சர்கள் 95 சதவீத அறிவிப்புகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர்.

சட்டப்பேரவையில் நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை. திமுக அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்கின்றன என வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தினோம். முதலீட்டாளர் மாநாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, செலவினம் குறித்த கேள்விக்கும் பதில் தரவில்லை. குருவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுத்தொகை கிடைக்கவில்லை. அத்தியாவசிய பொருட்களின் உயர்வு தொடர்பாக கேட்டதற்கு பதில் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை திமுக இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவலை அளித்து வருகிறார். எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்துவைத்திருக்கிறேன். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story