வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி புறப்பட்டு சென்றார் முதல்-அமைச்சர்


தினத்தந்தி 21 Dec 2023 5:05 AM GMT (Updated: 21 Dec 2023 5:16 AM GMT)

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு செய்கிறார்.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட மழை காரணமாக சாலைகளும், குடியிருப்புகளும் வெள்ளம் சூழ்ந்து குளங்கள் போல் காட்சியளிக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் மழை நின்ற நிலையில் தாழ்வான இடங்களில் தேங்கிய வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தேங்கிய நீர் வடிந்ததால் அங்கிருந்து மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. பஸ் போக்குவரத்தும் ஓரளவு சீரான நிலையில், அங்கு இயல்பு நிலை படிப்படியாக திரும்பிவருகிறது.

ஆனால் தூத்துக்குடி மாவட்டம் இன்னமும் வெள்ளத்தில்தான் மிதக்கிறது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீரும் தூத்துக்குடி நகருக்குள் புகுந்தது. இதனால் நகரமே நீரால் சூழப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். இண்டிகோ விமானம் மூலமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் செல்கிறார். காலை 11.45 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தூத்துக்குடிக்கு சென்றடைகிறார்.

பின்னர் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை நேரடியாக ஆய்வு செய்கிறார். ஆய்வை முடித்து கொண்டு இரவு 9.25 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.


Next Story