உயர்கல்வித்துறை சார்பில் ரூ.87.76 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


உயர்கல்வித்துறை சார்பில் ரூ.87.76 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

உயர்கல்வித்துறை சார்பில் ரூ.87.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார்ந்த கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

அந்த வகையில், வேலூர் - தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 150 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.8 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டிடம்; கோயம்புத்தூர் - அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.8 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள்; திருப்பூர் - எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சிதிலமடைந்துள்ள முதன்மை கட்டிடத்திற்கு மாற்றாக ரூ.10 கோடியே 94 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம்;

கோயம்புத்தூர் - பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள நவீன அறிவியல் ஆய்வகக் கட்டிடத்தின் மேல்பகுதியில் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் தளங்கள் மற்றும் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மகாகவி பாரதியார் ஆராய்ச்சி மையம்; நாமக்கல் - என்.கே.ஆர். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.3 கோடியே 42 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 18 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்; புதுக்கோட்டை - மாமன்னர் கல்லூரியில் ரூ.3 கோடியே 4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்;

காரைக்குடி - அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 159 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.8 கோடியே 36 லட்சத்து 34 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் விடுதிக் கட்டிடம்; மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மனிதவள மேம்பாட்டு மையத்திற்கான கருத்தரங்குக் கூடம்;

திருநெல்வேலி - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கீழநத்தம் கிராமம், சீவலப்பேரி சாலையில் ரூ.6 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தொலைதூரக் கல்வி மற்றும் தொடர்நிலை கல்வி இயக்ககத்திற்கான கல்வி வளாகக் கட்டிடம்; திருநெல்வேலி - அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ரூ.2 கோடியே 70 லட்சம் செலவில் 60 மாணவர்கள் தங்கும் வகையில் இரண்டாவது தளத்தில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் விடுதிக் கட்டிடம்;

திருச்சி மாவட்டம் - ஸ்ரீரங்கம், சேலம், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் மதுரை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ரூ.23 கோடியே 97 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள செய்கலைஞர் ஆய்வுக்கூடங்கள்; திருச்சி அண்ணா அறிவியல் மையக் கோளரங்கத்தில் ரூ.3 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்ட எண்ணிலக்க முழுக்கோள அமைப்பு கோளரங்கம்; என மொத்தம் ரூ.87 கோடியே 76 லட்சத்து 93 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் வினய், கல்லூரி கல்வி இயக்குநர் (மு.கூ.பொ) முனைவர் கீதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story