கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதி


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதி
x

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் கண் காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னை,

கொரோனா நோய்த் தொற்று கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கால் பதித்து, இன்றளவும் பாதிப்பு இருந்து வருகிறது.

அதிலும் தமிழகத்தில் குறைந்து வந்த நோய்த் தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் வீரியம் கொண்டு பரவி வருகிறது.

தொடர்ந்து உயர்வு

தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,269 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இப்படியாக ஒவ்வொரு நாளும் அதன் தாக்கம் உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது.

கொரோனா தாக்கத்தில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, அதனை அனைவரும் கடைப்பிடிக்க அறிவுறுத்தியும் வருகிறது.

இதுதவிர நோய்த் தொற்றுக்கு மேலும் ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கும் தடுப்பூசி என்ற கேடயத்தை அனைத்து மக்களுக்கும் செலுத்தும் பணியிலும் தீவிரமாக அரசு களம் இறங்கி இருக்கிறது. இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் நோய்ப்பாதிப்பு என்பது தற்போது இருந்து வருகிறது.

சி.டி.ஸ்கேன் எடுக்க வந்த மு.க.ஸ்டாலின்

அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அன்றைய தினம் காலையில் உடல் சோர்வுடன் இருந்த நிலையிலும் அரசு சார்பில் நடந்த 2 முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதியானதை அவரே தன்னுடைய 'டுவிட்டர்' பதிவில் தெரிவித்திருந்ததோடு, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கூறியிருந்தார். மேலும் அந்த பதிவில், 'அனைவரும் முககவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு பாதுகாப்பாய் இருப்போம்' என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தனிமைப்படுத்தி கொண்டு இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக நேற்று பிற்பகல் 12 மணிக்கு மேல் அவருடைய இல்லத்தில் இருந்து புறப்பட்டு வந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

அப்போது அவருக்கு தொண்டை மற்றும் உடல் வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகலில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, காவேரி ஆஸ்பத்திரியின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா அறிகுறிகளுக்கான பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

சிகிச்சை முடிந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.


Next Story